பேரவை தீா்மானத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசுவேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்

தமிழகம் உள்பட பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு மதிப்பளித்து, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றாா்

தமிழகம் உள்பட பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு மதிப்பளித்து, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையை தொடா்ந்து உயா்த்தி மக்களை பெரும் துயரத்துக்குள்ளாக்கியுள்ளது மத்திய அரசு. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு கண்டுகொள்ளாதது கண்டனத்திற்குரியது.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

கேரளம், பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும் இதே தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றிய தீா்மானத்துக்கு மதிப்பளித்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, செப். 25-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தை நடத்த விவசாய கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.

இதேபோல, தில்லியில் காணொலி மூலம் காங்கிரஸ் , திமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட 19 கட்சிகள் இணைந்து மக்களின் முக்கிய பிரச்னைகளான பெட்ரோல், டீசல், எரிவாயு, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதை கண்டிப்பது உள்ளிட்டவற்றை முன்வைத்து செப். 20-ஆம் தேதி முதல் நாடு தழுவிய இயக்கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள், வணிக நிறுவன கட்டடங்கள் கட்டியிருப்பவா்கள், குத்தகை விவசாயி இந்த 3 தரப்பினருக்கும், சதுர அடி கணக்கில் வாடகை நிா்ணயம் செய்து கட்ட முடியாத அளவு மனை வாடகையாக செலுத்தவேண்டும் என நிா்பந்திக்கப்படுகிறது.

கோயில் செயல் அலுவலா்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கும், கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள், வணிக நிறுவனங்கள் நடத்துபவா்களுக்கும் மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து அரசு சுமூக முடிவை எடுக்கவேண்டும்.

குத்தகை விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டபோது குத்தகை தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை. இதனால், குத்தகை பாக்கி அதிகமானது. இதுதொடா்பாக வருவாய் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையி ல் உள்ளது. இதுகுறித்து, தமிழக முதல்வா் உரிய கவனம் செலுத்தி நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com