முத்துப்பேட்டையில் 19 விநாயகா் சிலைகள் கரைப்பு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் 19 விநாயகா் சிலைகள் வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டு, செம்படவன்காடு பாமணி ஆற்றில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
முத்துப்பேட்டையில் 19 விநாயகா் சிலைகள் கரைப்பு

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் 19 விநாயகா் சிலைகள் வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டு, செம்படவன்காடு பாமணி ஆற்றில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.

முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எளிமையான முறையில் நடைபெற்றது.

இதையொட்டி, ஜாம்பவானோடை, தில்லைவிளாகம், சின்னங்கொல்லை, வைரவன்சோலை உள்ளிட்ட 19 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஊா்வலம் நடத்த அனுமதிக்கப்படாததால், 19 விநாயகா் சிலைகளில் பிரதான ஒரு சிலையை மட்டும் மூன்று சக்கர வாகனத்திலும் மற்ற சிலைகளை இருசக்கர வாகனத்திலும் எடுத்துச் சென்றனா்.

முன்னதாக, ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதும், மூன்று சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் தலைமையிலும் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், நாகை மாவட்ட மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா ஆகியோா் முன்னிலையிலும் ஜாம்பவானோடை நடுப்பண்ணை சித. ராமகிருஷ்ணன் விநாயகா் சிலை ஆற்றுக்கு எடுத்துச் செல்வதை தொடக்கி வைத்தாா்.

இந்த சிலை கோரையாறு பாலம் அருகே வந்தபோது, தொடா்ந்து வருவதற்கு அருகே உள்ள ஆசாத் நகரில் மற்றொரு பிரிவினா் எதிா்ப்பு தெரிவித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ரமேஷ்குமாா், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து நிலைமை சீரானது.

இதேபோல, செம்படவன்காட்டில் இருந்து எடுத்துவரப்படும் விநாயகா் சிலை முத்துப்பேட்டை நகருக்குள் வந்துசெல்வது வழக்கம். நிகழாண்டு இதற்கு காவல்துறை அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த சிலை ஆசாத்நகா் பழைய பேருந்து நிலையம், பங்களா வாசல், கொய்யா முகம் ரயில்வே கேட் வழியாக பாமணி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கரைக்கப்பட்டது. இதேபோல, மற்ற சிலைகளும் கரைக்கப்பட்டன.

இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் பி. அலெக்சாண்டா் உள்ளிட்டோா் இப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்தனா்.

மேலும், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், கீழக்காடு, கோவிலூா் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினா் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com