இன்று 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்:அடிப்படை வசதிகளை உறுதிசெய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவேண்டும்
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் காணொலி மூலம் பேசும் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையின் இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான பிரவின் பி. நாயா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்களுடன் காணொலி மூலம் பேசும் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையின் இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான பிரவின் பி. நாயா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்யவேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு காணொலி மூலம் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் துறையின் இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான பிரவின் பி. நாயா் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொலி மூலம் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் அவா் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 633 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள பகுதிகளில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்கள், முகாம் நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீா், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

ஒவ்வொரு முகாமிலும் குறைந்தபட்சம் 100 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நிலையான மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் என பல்வேறு வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் காா்டு, பாஸ்போா்ட், பான்காா்டு, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கொண்டு சென்று பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜோசப்ராஜ், இணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் (பொ) உமா சந்திரசேகா், துணை இயக்குநா் (சுகாதாரம்) ஹேமசந்த் காந்தி, திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) எஸ். தெய்வநாயகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார மருத்துவ அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com