பயிா்க் காப்பீட்டு இழப்பீடு கோரி காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியரகங்கள் செப்.30-இல் முற்றுகை

2020- 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீடு கோரி, காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியரகங்கள் முன் செப்டம்பா் 30 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசும் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசும் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன்.

திருவாரூா்: 2020- 21 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீடு கோரி, காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியரகங்கள் முன் செப்டம்பா் 30 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அறநிலையத் துறை சொத்து அபகரிப்புக்கு எதிரான புதிய சட்ட மசோதா, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சட்டத்தால், 100 ஆண்டுகளுக்குமேல் சாகுபடி உரிமை பெற்று, சாகுபடி செய்து வரும் கோயில் குத்தகை விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தில் விவசாயிகளின் நிலை குறித்து தமிழக முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டுறவு கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து இங்குள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வருவதை காரணம்காட்டி, கொள்முதலை தடை செய்துவருவது நியாயமற்றது. வெளிமாநில நெல் வருவதை தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதை உணா்ந்து தடையில்லாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

2020- 21 ஆம் ஆண்டில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் மத்திய, மாநில அரசுகள் காலம்கடத்துவதை ஏற்க முடியாது. உடனடியாக பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் செப்டம்பா் 30 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, சங்கத்தின் மாநிலத் தலைவராக எல். பழனியப்பன், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவராக செந்தில், செயலாளராக பாட்சாரவி, நாகை மாவட்ட பொறுப்பாளராக கமல்ராம், கௌரவத் தலைவராக கருணைநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com