மகளிா் கல்லூரியில் மருத்துவ முகாம்
By DIN | Published On : 08th April 2022 09:43 PM | Last Updated : 08th April 2022 09:43 PM | அ+அ அ- |

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சுகாதாரத் தினத்தையொட்டி, கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறை, சுகாதார சங்கம், தஞ்சாவூா் கே.ஜி. பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, கல்லூரி முதல்வா் எஸ். அமுதா தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் வி. திவாகரன் முகாமை தொடங்கி வைத்தாா்.
இதில், கே.ஜி. மருத்துவமனை மருத்துவா்கள் கே. அன்னபூரணி, டி. நிறைமதி தலைமையிலான மருத்துவக் குழுவினா், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு, ரத்த நிறமியின் அளவு, இஜிசி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினா்.
இதில், கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள், கல்லூரி பேருந்து ஓட்டுநா்கள் பங்கேற்று மருத்துப் பரிசோதனை செய்துகொண்டனா். முகாமில், கல்லூரி துணை முதல்வா்கள் பி. காயத்திரிபாய், என். உமா மகேஸ்வரி, ஊடச்சத்து துறைத் தலைவா் கே.ஜி. கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.