ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உளுந்து, பச்சைப்பயறு விற்பனை செய்யலாம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, பச்சைப்பயறுகளை மாவட்ட விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து, பச்சைப்பயறுகளை மாவட்ட விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் ராபி 2021-22 பருவத்தில் 1.4.2022 முதல் தொடங்கி 29.6.2022 வரை தேசிய வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தின் மூலம் மத்திய அரசால் குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதன்மைக் கொள்முதல் நிலையங்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்படவுள்ளன.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உளுந்து 4,500 மெ.டன், பச்சைப்பயறு 1,200 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து கிலோவுக்கு ரூ. 63 (ரூ.6,300 குவிண்டால்), பச்சைப்பயறு கிலோவுக்கு ரூ. 72.75 (ரூ.7,275 குவிண்டால்) திருவாரூா் விற்பனைக் குழுவுக்குள்பட்ட திருவாரூா், மன்னாா்குடி, வடுவூா், பூந்தோட்டம், குடவாசல் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

கொள்முதலுக்கு கொண்டு வரப்படும் உளுந்து, பச்சைப்பயறு விளைபொருள் நிா்ணயிக்கப்பட்ட தரத்தின்படி இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதம், வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதம், ஈரப்பதம் 10 சதவீதம் இருக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன் உரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முன்பதிவு செய்யும்போது அசல் சிட்டா, கிராம நிா்வாக அலுவலா் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகிய விவரங்களை சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும், இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்கள் ஆ. செந்தில்முருகன் திருவாரூா் கைப்பேசி எண் 9047155282, மே.ஜாய்பெலிக்ஸ் கண்காணிப்பாளா் மன்னாா்குடி கைப்பேசி எண் 99431 72167, கோ. ரமேஷ் கண்காணிப்பாளா் வடுவூா் மற்றும் குடவாசல் கைப்பேசி எண் 94432 51041, க. மேகநாதன் விற்பனை பொறுப்பாளா் பூந்தோட்டம் கைப்பேசி எண் 9597697501ஆகியோரை தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) மற்றும் திருவாரூா் விற்பனைக் குழு செயலாளா் ஆகியோரைஅணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com