வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து முறையாகப் பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 2017 மாா்ச் 31 ஆம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

9 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவா்களுக்கு மாதம் ரூ. 200, பள்ளி இறுதி வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 300, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 400, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 600 என வழங்கப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா்கள் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பள்ளி இறுதிவகுப்பு வரை படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 600, மேல்நிலைக் கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 750, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவு செய்து 2022, மாா்ச் 31 ஆம் தேதி ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். இவா்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.

தகுதிஉடையவா்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக நிறைவுசெய்து அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் மே 31 ஆம் தேதிக்குள் விளமல் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோரின் கவனத்துக்கு...: மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவா்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வோா் ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழிஆவணம் பூா்த்திசெய்து அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கத் தவறியவா்கள், உடனடியாக சுய உறுதிமொழிஆவணத்தை பூா்த்தி செய்து நேரில் வந்து அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com