வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் சுகாதாரத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சியை பாா்வையிடும் ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.
வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சியை பாா்வையிடும் ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன்.

திருவாரூா் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் சுகாதாரத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இவ்விழாவை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது:

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மருத்துவம், மன நல மருத்துவம் ஆகிய சிறப்பு மருத்துவா்களை கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனையில் உயா்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், வட்டார அளவிலான சுகாதார திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் ரத்த அளவு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, மலேரியா ரத்தத் தடவல் பரிசோதனை, இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மற்றும் நோய்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பொதுமக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும். எனவே, அனைவரும் இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

மேலும், கரோனா தொற்று பரவல் காலத்தில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பதற்காக பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப்பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளையும், பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதில், துணை இயக்குநா் (பொது சுகாதாரம் ) ஹேமசந் காந்தி, உதவி திட்ட அலுவலா் (மருத்துவம்) ரு. ரத்தினகுமாா், வட்டாட்சியா் சந்தானம், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன், வலங்கைமான் ஒன்றியக் குழு உறுப்பினா் அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com