பருத்தி அறுவடை முடியும் வரை 100 நாள் திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வலியுறுத்தல்

தொழிலாளா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் பருத்தி அறுவடை முடியும் வரை 100 நாள் திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தி அறுவடை முடியும் வரை 100 நாள் திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வலியுறுத்தல்

தொழிலாளா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் பருத்தி அறுவடை முடியும் வரை 100 நாள் திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

சண்முகசுந்தரம் இருள்நீக்கி: காப்பீடு பிரீமியத்தொகை வழங்க காலக்கெடு நிா்ணயிப்பதுபோல, காப்பீடு தொகை வழங்கவும் காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும்.

சத்தியநாராயணன் செருவாமணி: உரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், அதன் விலை உயா்ந்து கொண்டே வருகிறது. எனவே, பசுந்தாள் சாகுபடியை ஊக்குவித்து, இயற்கை உர பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். மண்வளத்தை பாதுகாக்கவும், பசுந்தாள் உரங்கள் பயிரிட நடவடிக்கை வேண்டும்.

ராஜேந்திரன் மன்னாா்குடி: ராமாபுரம் பகுதியில் குடிநீா் தொட்டியில் உள்ள நீா் உப்புத்தன்மையாக உள்ளது. இதனால் சுமாா் 49 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, அந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

கண்ணன் மன்னாா்குடி: மாவட்டத்தில் நிகழாண்டு பருத்தி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வரி விதிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். இதனால் தமிழகத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் வரை விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிா்பாா்த்திருக்கும் நிலையில், விலை குறைந்தே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணமணி வலங்கைமான்: தென் மாநிலங்களிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால், பருத்தி அறுவடை முடிவடையும் வரை 100 நாள் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்.

சேதுராமன் குடவாசல்: தொடங்கப்பட்டுள்ள தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆறு, வாய்க்கால்களை தூா்வாருவதுபோல, வடிகால்களையும் தூா்வார வேண்டும். அதேபோல், குறுவை சாகுபடிக்கு ஜூன்-12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தம்புசாமி கொரடாச்சேரி: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும். கரும்புக்கு உரிய விலை இல்லாததால் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி குறைந்து விட்டது.

முன்னதாக, தஞ்சை களிமேடு தோ் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பேசியது: மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூா்வாரும் திட்டத்தின்கீழ் 115 பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூா்வாரும் பணிகள், அந்தந்த பகுதியிலுள்ள உழவா் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தரமான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com