முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருவாரூா் மாவட்டத்தில் மே 1இல் கிராமசபை கூட்டம்
By DIN | Published On : 29th April 2022 09:59 PM | Last Updated : 29th April 2022 09:59 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தக் கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம், தனிநபா் சுகாதாரம், ஊராட்சி வளா்ச்சித் திட்டம் தயாா்செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்தல், முன்மாதிரி கிராமமாக உருவாக்குதல், அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, விரிவான கிராம சுகாதாரத் திட்டம், வேளாண்மை மற்றும் உழவா் நலன், நமக்கு நாமே திட்டம், அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
ஊராட்சிகள், அனைத்து நிலைகளிலும் தன்னிறைவைப் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்ற உள்ள கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, ஊராட்சியின் வளா்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும்.