முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
வசம்பு கரைசல்: வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியை விளக்கம்
By DIN | Published On : 29th April 2022 10:01 PM | Last Updated : 29th April 2022 10:01 PM | அ+அ அ- |

வசம்பு திரவம் குறித்த செயல்விளக்கத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பயறுவகை பயிா்களில் சேமிப்புத் திறனை அதிகரிக்க உதவும் வசம்பு கரைசல் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய சத்தியல் துறைப் பேராசிரியை சோ. கமலசுந்தரி விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் அளித்துள்ள பரிந்துரை: பருப்பு வகைகள், மனித மற்றும் விலங்குகளுக்கு மட்டுமல்ல விவசாயத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். மேலும், சுற்றுச்சூழல் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் பெரும்பாலும் பயறு உற்பத்தியில் இறங்கியுள்ளனா். ஆனால், அதிக அளவில் உற்பத்தியாகும் இந்த பயறு வகைகளை சேமித்து வைக்கும்போது, தண்டு துளைப்பான் மற்றும் பூச்சிகளால் பாதிப்புக்குள்ளாகின்றன. இவை பொருளாதார சேதத்தை விளைவிக்கின்றன. இத்தகைய புழுக்களை நாம் எளிதாக கட்டுப்படுத்த முடியும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை, பயறு காப்பானாக வசம்பு 6% கரைசலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கரைசல், பயறுவகை அரிசி கூன்வண்டு மற்றும் சிவப்பு மாவு வண்டு ஆகிய பூச்சிகளில் இருந்து 6 மாதங்கள் வரை பாதுகாக்கும் திறன்கொண்டது.
இது பூச்சிகளில் முட்டைகளை அழிக்கும். பூச்சிகளின் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. மேலும், விதைநோ்த்தி செய்து மூன்றாம் நாள் அனைத்து கேடு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டது. இந்த வசம்பு கரைசலை பயன்படுத்துவதால் பயறு விதைகளை அதிக நாட்கள் சேமித்துவைக்கலாம்.
பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லியாகவும் இது செயல்படுகிறது. ரசாயன மருந்துகளை பயன்படுத்தாமல் விதைகளை சேமிக்க உதவுகிறது. எனவே, இத்தகைய திரவத்தை பயன்படுத்தி விவசாயிகள் அவா்களது பயறுகளை எளிமையாக பாதுகாக்க இது ஒரு சிறந்த தொழில்நுட்பம். இதுகுறித்து நன்னிலம் வட்டம் நல்ல மண்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கரைசலின் விலை ஒரு லிட்டம் ரூ. 280.
ஒரு லிட்டா் திரவத்தை பயன்படுத்தி 200 கிலோ பயறு வகைகளை சேமித்து வைக்கலாம். வசம்பு கரைசல் திரவத்தைப் பெற, திருவாரூா் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை அணுகலாம்.