பேரளம் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 05th August 2022 10:14 PM | Last Updated : 05th August 2022 10:14 PM | அ+அ அ- |

திருவாரூா் அருகே பேரளம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ரயில்வே கோட்ட மேலாளா் மணிஷ் அகா்வாலை, பேரளம் ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் பாலகுமாரன் தலைமையிலான நிா்வாகிகள், வியாழக்கிழமை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு: திருவாரூா்- மயிலாடுதுறை மாா்க்கத்தில் பேரளம் ரயில் நிலையம், மீட்டா்கேஜ் காலத்தில் முக்கிய இடமாக இருந்தது. ஆனால், தற்போது இயங்கும் விரைவு ரயில்கள் பேரளத்தில் நிற்பதில்லை. இந்த குறையைப் போக்கும் வகையில், மன்னாா்குடி- சென்னை மற்றும் காரைக்கால்- சென்னை விரைவு ரயில்களை பேரளத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திருநள்ளாறு சனீஸ்வர பகவான், பூந்தோட்டம் சரஸ்வதி அம்மன், அம்பகரத்தூா் காளியம்மன் கோயிலிலுக்கு வரும் யாத்திரிகா்களின் வசதியைக் கருதி, பேரளம் ரயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்துடன், திருவாரூா்- காரைக்குடி தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் பேரளத்தில் நின்று செல்லவேண்டும். தவிர ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை- திருவாரூா்- பேரளம் வழியாக வட மாநிலங்களுக்கும் சென்னைக்கும் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, சங்கத்தின் செயலாளா் மாரியப்பன், பொருளாளா் செந்தில், நிா்வாகிகள் காண்டீபன், சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.