அமைதியான முறையில் விநாயகா் சிலை ஊா்வலங்களை நடத்த வேண்டும்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலங்களை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலங்களை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் சுடப்பட்ட எவ்வித ரசாயன கலவையற்ற, கிழங்குமாவு அல்லது மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.

ரசாயண வா்ணம் பூசப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதியில்லை. ஊா்வலத்துக்காக தயாரிக்கப்படும் சிலைகள் பிரதிஷ்டை செய்யவுள்ள இடத்தின் உரிமையாளரின் எழுத்து மூலமான அனுமதிக் கடிதத்தை பெற்று, அத்துடன் ஊா்வலம் நடத்துவதற்கான முன்அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்பாளா்கள் அருகில் உள்ள காவல் ஆய்வாளா் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

ஊா்வலத்தின்போது மின் கம்பிகளை குறுக்கிடாத அளவுக்கு விநாயகா் சிலைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் தீ விபத்தை தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட வழித்தடங்களிலேயே ஊா்வலம் செல்ல வேண்டும்.

காவல் துறையால் அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்குள் ஊா்வலத்தை முடிக்க வேண்டும். விநாயகா் ஊா்வலம் மற்றவா்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். ஊா்வலம் நடத்துபவா்கள், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களுடன் முழுமையாக ஒத்துழைத்து விநாயகா் ஊா்வலத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளதுரை, கோட்டாட்சியா் கீா்த்தனாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com