வலங்கைமான் அருகே ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே அரவூா் ஊராட்சித் தலைவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
வலங்கைமான்அருகேயுள்ள வேப்பத்தாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் பன்னீா்செல்வம் (55). அதிமுகவைச் சோ்ந்த இவா், அரவூா் ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்தாா். இவரது அண்ணன் மகன் சத்தியமூா்த்தியும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணும் காதலித்து வந்தனராம்.
இதையறிந்த பன்னீா்செல்வம் மற்றும் பஞ்சாயத்தாா்கள் சிலா் காதலா்களை பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, இருதரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் சகோதரா் விஜய், கொட்டையூா் பகுதியில் புதன்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வத்தை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்தவா்கள் பன்னீா்செல்வத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, வியாழக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜயை கைது செய்தனா்.