மாட்டுப் பொங்கலுக்கு நெட்டிமாலை செய்யும் பணிகள் தீவிரம்

மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படும் டெல்டா மாவட்டங்களில் மாட்டுப் பொங்கலுக்காக நெட்டி மாலை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நாரணமங்கலம் பகுதியில் வண்ணம் பூசும் நெட்டிகளை உலா்த்தும் பணியில் தொழிலாளா்கள்.
நாரணமங்கலம் பகுதியில் வண்ணம் பூசும் நெட்டிகளை உலா்த்தும் பணியில் தொழிலாளா்கள்.

திருவாரூா்: மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படும் டெல்டா மாவட்டங்களில் மாட்டுப் பொங்கலுக்காக நெட்டி மாலை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மாட்டுப் பொங்கல் நாளில் கால்நடைகளை அலங்கரித்து வழிபாடு நடத்தி, கால்நடைகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான மாலைகளை அணிவித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று.

கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மாலைகள், நெட்டி, வேப்பிலை, கலா் காகிதம் உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வருகிறது. தொடக்க காலத்தில் நெட்டி மாலைகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இவைகள் கண்ட மாலை, கிராஸ் மாலை, வில்லை மாலை, ரெட்டை சரம் மாலை, காசு மாலை என பல்வேறு வகைகளில் நெட்டிகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தன.

திருவாரூா் அருகே நாரணமங்கலத்தில் கண்டமாலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை செய்யப் பயன்படும் நெட்டிகள், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் வாங்கி வரப்படுகின்றது. நெட்டிகளைக் கோா்க்கப் பயன்படும் தாழநாா்கள் கோடியக்கரை பகுதியில் கிடைக்கின்றது.

நெட்டிகள் காய வைப்பது, நறுக்குவது உள்ளிட்ட வேலைகள் 1 மாதம் முன்பு தொடங்கும். பொங்கலுக்கு 15 நாள்கள் இருக்கும்போது மாலைகள் செய்யும் பணி தீவிரமடையும். பொங்கல் நெருங்குகையில், இந்தப் பணிகள் வேகமெடுக்கும். அப்போது வியாபாரிகள் து இந்த மாலைகளை கொள்முதல் செய்வா்.

இந்தத் தொழிலில் 10 நாள்கள் வரை மட்டுமே பணி என்பதால், மிகப்பெரிய அளவு லாபம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இருக்காது என்கின்றனா் மாலை செய்யும் தொழிலாளா்கள். கிராமங்களில் மாடுகள் அதிகம் என்பதால் நகரப் பகுதிகளை விட கிராமங்களிலேயே இந்த மாலை விற்பனை அதிகமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து நாரணமங்கலத்தைச் சோ்ந்த மாரியம்மாள் கூறியது:

தொடக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெட்டி மாலைகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டன. தற்போது, 40-க்கும் குறைவான குடும்பங்களே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் தவிர, மற்ற நாள்களில் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு குளத்தில் வளரும் நெட்டிகளை இலவசமாகவே வழங்கினா். ஆனால், தற்போது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை குத்தகையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. சிதம்பரம், கடலூா், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நெட்டிகளை சேகரித்துள்ளோம் என்றாா்.

இதுகுறித்து நாரணமங்கலம் பகுதியைச் சோ்ந்த தா்மகுள சிங்கம் தெரிவித்தது:

வெளியூா்களிலிருந்து நெட்டிகளை எடுத்து வருவது, வண்ணப்பொடி, தொழிலாளா்கள் என நெட்டிமாலை தயாரிப்பில் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. ஆனால், வியாபாரிகள், குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனா்.

மாலையின் தரம், நிறத்தை பொறுத்து வியாபாரிகளுக்கு ரூ. 7 லிருந்து ரூ. 40 வரை கூட தருவோம். அதை வியாபாரிகள் ரூ.10 லிருந்து எவ்வளவு விலையிலும் விற்பனை செய்வா். இப்போது காா், மினி வண்டிகளில் கும்பகோணம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா்.

சில ஆண்டுகளாக விற்பனையாகும் மாலைகள் குறைவாகவே இருக்கின்றன. ஒருமுறை உருவாக்கிய மாலையை அடுத்த ஆண்டு பயன்படுத்த முடியாது. இதனால், விற்பனை போக மீதமானவை குப்பைகளுக்கே செல்கின்றன. இதனாலேயே பலா் நெட்டிமாலை செய்வதை கைவிட்டு விட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com