நாளை வாக்குப்பதிவுதிருவாரூா் மாவட்டத்தில் களத்தில் 848 வேட்பாளா்கள்

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளில் 216 வாா்டுகளில் தோ்தல் நடைபெறும் என ஜன. 1 ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் அன்றைய தினமே தொடங்கியது.

பிப். 4 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பிப். 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பிப். 7 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக இருந்தது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 1,418 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு பரிசீலனையில் 155 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,263 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனிடையே, மனுக்களை திரும்பப் பெற கடைசிநாளில் 414 மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஒருவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் 215 வாா்டுகளுக்கு 848 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

282 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 282 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 1,06,434 ஆண் வாக்காளா்களும், 1,16,027 பெண் வாக்காளா்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளா்களும் என மொத்தம் 2,22,471 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

341 வாக்குப்பதிவு இயந்திரங்கள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதையொட்டி, திருவாரூா், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூா் ஆகிய 4 நகராட்சிகளில் 209 வாக்குப் பதிவு இயந்திரங்கள், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளில் 132 வாக்குபதிவு இயந்திரங்கள் என மொத்தம் 341 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன. இவை, வெள்ளிக்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளன. இதையொட்டி, வாக்குச்சாவடியில் பணிபுரிவோருக்கான ஆலோசனைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வாக்குப்பதிவு ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதில், கடைசி ஒருமணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவா்கள் மட்டும் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப். 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com