தமிழ்நாட்டில் ரெளடிகளை ஒடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜா

தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலத்தில் நடந்த வர்த்தகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.
நீடாமங்கலத்தில் நடந்த வர்த்தகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.

நீடாமங்கலம்: தமிழகத்தில் ரெளடிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வணிக சம்மேளனம் முதன்மை துணைத் தலைவரும்,வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவருமான விக்கிரமராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

நீடாமங்கலம் வர்த்தகர்  சங்க பொதுக்குழு கூட்டம் 2022-2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்க தலைவர் பி.ஜி  ஆர்.ராஜாராமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் மன்னை சு.ஞானசேகரன், திருவாரூர் மாவட்ட தலைவர் வி.கே.கே. ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எஸ்.எம். டி.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர்  ஜி. வெங்கடேசன் வரவேற்று பேசினார். வரவு செலவு கணக்குகளை பொருளாளர் கே.ரமேஷ் வாசித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு அகில இந்திய வணிக சம்மேளனம்  முதன்மை துணைத் தலைவர், வணிகர் சங்கங்களின பேரமைப்பு மாநில தலைவர் ஏ. எம். விக்கிரமராஜா பேசுகையில் கூறியதாவது:

திருவாரூர் மாவட்டத்தில் வர்த்தக சங்க அமைப்புகளின் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது. நீடாமங்கலம் வர்த்தக சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று எல்லா பொருள்களுக்கும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிக்கிறது. அரிசி, தயிர் ,ஊசி, பால், ரப்பர் போன்ற பொருள்களுக்கு வரி போடப்பட்டுள்ளது. மளிகை கடைகளில் இருக்கக்கூடிய சாதாரண பொருள்களுக்கு கூட ஜிஎஸ்டி போட்டு உள்ளார்கள். 

மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளையும், மாநில அரசு செஸ் வரியையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பொதுமக்கள் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி போட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, மாநில அரசின் செஸ் வரிவிதிப்பு ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும். மத்திய அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தபோது  வரியை போட்டுக் கொண்டே இருப்பார். அவரையும் தாண்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று எதற்கெடுத்தாலும் வரி போடுவதிலேயே உள்ளார்.

வர்த்தக நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்பு, வணிகவரி, காவல்துறை ஆகிய துறை அதிகாரிகளின் அத்து மீறல் நடவடிக்கைகள் இருந்தால் அது தொடர்பாக சங்கம் சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கும். வர்த்தகர்கள் மீது ரெளடிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அது தொடர்பாக காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ரெளடிகளை ஒடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர்கள் அனைவரும் தவறாக கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் உண்ணாவிரத போராட்டம், தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்தடுத்து நடத்தப்படும் போராட்டங்களில் வர்த்தகர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மண்டல தலைவர் செந்தில்நாதன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாநில  பொருளாளர்  சதக்கத்துல்லா,  தஞ்சை மாவட்ட தலைவர் சுப்பு, நீடாமங்கலம் துணைத்தலைவர் ஆர்.பி.எல்.பழனிகுமார்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் மாநில தலைமை கட்டிட நிதிக்காக ரூ1. லட்சத்துக்கான காசோலையை தலைவர் ராஜாராமன் மற்றும் நிர்வாகிகள் விக்கிரமராஜாவிடம் வழங்கினார். விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி பதவியேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளை விக்கிராமராஜா சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டும். நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிம் கட்ட வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவின் முடிவில் துணைத்தலைவர் ஏ.அஜிசுல்லா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com