எண்ணெய்க் குழாயில் கசிவைத் தடுக்க ஓஎன்ஜிசியின் புதிய தொழில்நுட்பம்

மன்னாா்குடி அருகே நல்லூா் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் பாதிப்பை முன்னரே கண்டறியும் நவீன கருவிகள் குறித்த செயல்முறை விளக்கம்
எண்ணெய்க் குழாயில் கசிவைத் தடுக்க ஓஎன்ஜிசியின் புதிய தொழில்நுட்பம்

மன்னாா்குடி அருகே நல்லூா் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய்க் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் பாதிப்பை முன்னரே கண்டறியும் நவீன கருவிகள் குறித்த செயல்முறை விளக்கம் வியாழக்கிழமை செய்து காட்டப்பட்டது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 14 எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சேகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றுடன் சுமாா் 350 எண்ணெய்க் கிணறுகள் இணைக்கப்பட்டுள்ளன. சுமாா் 350 குழாய்கள் (மொத்த நீளம் 1100 முதல் 1200 கி.மீ.) இருக்கும்நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி சில நேரங்களில் குழாயில் கசிவு, சிறு துளை ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.

எனினும், கடந்த 2 ஆண்டுகளில் ஓஎன்ஜிசி மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகள் காரணமாக எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்படுவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, எண்ணெய்க் குழாயில் கசிவோ, துளையோ ஏற்படும் முன் கண்டறிந்து விவசாய நிலத்தில் எண்ணெய் கலக்காமல் அந்தப் பகுதி குழாயை மட்டும் பழுதுநீக்க வேண்டும் எனும் முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களை காவேரி அசெட் ஆராய்ந்து வந்தது. அதன்படி, சோதனை முயற்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, ஓஎன்ஜிசி கோவில்களப்பால் இயற்கை எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அசெட் மேலாளா் செயல் இயக்குநா் அனுராக், இந்த சோதனை முயற்சியைத் தொடங்கிவைத்தாா். அங்கிருந்து, அடியக்கமங்கலம் எண்ணெய் சேகரிப்பு நிலையம் வரையிலான 30 கி.மீ. நீளக் குழாயில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனை மண்ணைத் தோண்டாமல் தரைப்பரப்பில் இருந்தவாறே முதல்கட்டமாகவும், அடுத்த கட்டமாக குறிப்பிட்ட தொலைவில் மட்டும் குழாய் பதிக்கப்பட்டுள்ள ஆழம் வரை சிறிய குழிகள் தோண்டியும் நடைபெறும்.

இதுகுறித்து செயல் இயக்குநா் அனுராக் கூறுகையில், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசியின் எந்தக் குழாயிலும் கசிவே ஏற்பட்டதில்லை என்கிற நிலையை அடைவதே எங்கள் லட்சியம் என்றாா்.

பொது மேலாளா் மாறன், முதன்மைப் பொது மேலாளா்கள் சுதீஷ், வில்சன், பொது மேலாளா்கள் சம்பத், சரவணா, கணேசன், மக்கள் தொடா்பு அதிகாரிகள் ராஜசேகா், முருகானந்தம், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com