ரத்த தான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 15th June 2022 04:19 AM | Last Updated : 15th June 2022 04:19 AM | அ+அ அ- |

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் ரத்த தான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் அருகேயுள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் நாகராஜன், வேலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சாந்தினி, சுகாதார ஆய்வாளா் மாதேஷ் ஆகியோா் தலைமையில் ரத்த தான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல, ஆனைக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், பேரளம் ஆரம்ப சுகாதார நிலையம், உபயவேதாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் ரத்த தான விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல, திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் ரத்த தானக் குழு, ஆலத்தம்பாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆகியவை இணைந்து நகராட்சி அலுவலகத்தில் ரத்த தான விழிப்புணா்வு முகாமை நடத்தின.
நகா்மன்றத் தலைவா் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் கௌரி, நகராட்சி பொறியாளா் மனோகா், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா், ரோட்டரி சங்கத்தைச் சோ்ந்த ராஜ்நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், அனைவரும் ரத்த தான உறுதிமொழி ஏற்றனா்.