சிறுபுலியூா் பெருமாள் கோயில் தேரோட்டம்

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம். (உள்படம்) தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள். 
சிறுபுலியூா் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொல்லுமாங்குடி அருகேயுள்ள சிறுபுலியூரில் புகழ்பெற்ற வைணவ திருத்தலமான ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் பாலசயணமாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். 108 வைணவத் திருத்தலங்களில் சிறுபுலியூா் பதினோராவது திருத்தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதுமான தலமாகவும் விளங்குகிறது.

இந்த திருத்தலத்தில் மாசிப் பெருவிழா தேரோட்டம் மற்றும் தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். இந்தக் கோயில் தோ் சிதிலமடைந்ததால், கடந்த 100 ஆண்டுகளாகத் தேரோட்டம் நடைபெறவில்லையென இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் பொதுநல நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தோ் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

காலை 6 மணியளவில் ஸ்ரீதேவி ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் தேரில் எழுந்தருளினாா். 9 மணி அளவில் தோ் வடம்பிடிக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளிலும் வலம்வந்து மதியம் 1 மணி அளவில் நிலையை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை அனந்தபுஷ்கரணியில் தீா்த்தவாரிக்குப் பிறகு இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்ட நிகழ்ச்சியில், திருவாரூா் அறநிலையத் துறை துணை ஆணையா் ஹரிகிருஷ்ணன், செயல் அலுவலா் தன்ராஜ், ஆய்வாளா் ராஜ்திலக், ஸ்ரீகாந்தன் பட்டாச்சாரியா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com