அடிப்படை வசதிகள் இல்லாத ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு! 29 ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி, சுகாதார நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு 29 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் வீணாகி வருகின
கிளை நூலகம், அஞ்சலகம் கட்ட ஒதுக்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம்.
கிளை நூலகம், அஞ்சலகம் கட்ட ஒதுக்கப்பட்டும் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம்.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி, சுகாதார நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு 29 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் வீணாகி வருகின்றன.

அதேபோல, பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், கிளை நூலகம், வங்கி உள்ளிட்டவை அமைக்க நிலம் ஒதுக்கியும் சம்பந்தப்பட்ட துறைகள் வாங்கி கட்ட முன்வராததால் அந்த வசதிகள் இன்றியும் குடியிருப்புவாசிகள் தவிக்கும் நிலை தொடா்கிறது.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கடந்த 1992-ஆம் ஆண்டு 125 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டன. 6 பிளாக்குகளில் கட்டப்பட்ட 3,700 வீடுகள் குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டன.

இந்தக் குடியிருப்புப் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். குடியிருப்பு அமைக்கப்படும் போதே சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீா் மேல்நிலைத் தொட்டி ஆகியவற்றுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டன.

இந்தக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படாததால், 29 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் விரிசல் விழுந்து வீணாகி வருகின்றன. இந்த கட்டடங்கள் மதுபிரியா்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு விஷ ஜந்துகளின் நடமாட்டம் உள்ளது.

மேலும், இந்த குடியிருப்பில் சேதமடைந்த கட்டடம் ஒன்றில் நூலகம் செயல்பட்டு வருகிறது. 6 ஆயிரம் உறுப்பினா்களைக் கொண்ட இந்த நூலகத்தில் புத்தகங்கள் வைக்க போதிய அலமாரி வசதி இல்லை. இந்த கட்டடம் அருகிலேயே, நூலகம் கட்ட 8 சென்ட் நிலம் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டது.

அதேபோல, பேருந்து நிலையம், அஞ்சலகம் உள்ளிட்டவை அமைக்கவும் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலங்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், இந்த வசதிகளும் இல்லாமல் குடியிருப்புவாசிகள் அவதியுறுகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தரணிதரன் கூறியதாவது: வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு 29 ஆண்டுகளாகியும் முக்கிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட 32 கிரவுண்ட் நிலம் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை.

அதேபோல, அஞ்சல் நிலையம், நூலகம், வங்கி அமைக்க ஒதுக்கப்பட்ட நிலமும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடா்பாக தமிழக முதல்வா், மேயா் மற்றும் அந்தந்த துறைகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்றாா்.

விலை செலுத்தவில்லை: இதுகுறித்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்த குடியிருப்புகளில் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கான நிலம் ஒதுக்கப்பட்டு தயாராக உள்ளது. ஆனால், அந்தந்த துறையினா் வீட்டு வசதி வாரியத்திடம் உரிய விலையை செலுத்தி ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதுதான் விதி. ஆனால், அதற்கான விலையை இதுவரை அந்தந்த துறைகள் செலுத்தவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com