மத்திய அரசின் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது: அமைச்சர் எ.வ.வேலு

மத்திய அரசின் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். 
அமைச்சர் எ.வ.வேலு.
அமைச்சர் எ.வ.வேலு.

மத்திய அரசின் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். 

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு திருவாரூர் மாவட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட அரசவனங்காடு பகுதியில் 2.90 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கம் மற்றும் அகலப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வனப் பரப்பை உயர்த்தும் வகையில் சாலையோரம் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, மாநிலம் முழுவதும் 1295 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 7 புறவழி சாலைகள் நிறைவேற்ற  கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்தவித பணிகள் நடைபெறாத நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன்  திருத்துறைப்பூண்டி புறவழிச் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மீதமுள்ள ஆறு புறவழிச்சாலை பணிகளும் இந்த நிதி ஆண்டுக்குள் நடைபெற திட்டமிட்டுள்ளன. கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின் கீழ்  திருவாரூர் மாவட்டத்தில் நபார்டு உதவியுடன் ரூ. 60 கோடி மதிப்பிலான 19 கிராமப்புற பாலங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு 14 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 5 பால பணிகளும் இந்த நிதி ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளன. தரமான, விபத்தில்லா சாலை அமைப்பதில் அரசு தெளிவான முறையில் உள்ளது. 

கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் நெடுஞ்சாலை பணிகளுக்கு மாநில அரசு மேற்கொள்ளவேண்டிய நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com