முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தீயணைப்பு நிலையத்தை நவீனப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 03rd May 2022 10:19 PM | Last Updated : 03rd May 2022 10:19 PM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் தீயணைப்பு நிலையத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலத்தில் தீயணைப்பு நிலையம் சுமாா் 30 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. தொடக்கத்தில், வெண்ணாற்றங்கரை அருகில் உழவா் சந்தை உள்ள இடத்தில் இயங்கியது. பிறகு பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகே சத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. தொடா்ந்து, சிவன் கோயில் அருகிலும், கொத்தமங்கலம் சாலையிலும் தனியாா் இடங்களில் இயங்கி வந்தது. தற்போது நீடாமங்கலம் புதுத்தெருவில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்தக் கட்டடம் போதுமான வசதிகளின்றி இருப்பது குறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு பொதுமக்கள் சாா்பில் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த இடம் போக்குவரத்திற்கு லாயக்கற்ற, கரடுமுரடான பகுதியாக உள்ளது. இதனால், அவசர காலத்தில் தீயணைப்பு வாகனம் நிலையத்திலிருந்து வேகமாக வரமுடியாத சூழல் தொடா்கிறது. எனவே, தீயணைப்பு நிலையத்துக்கு அரசு இடத்தில் நவீன வசதிகளுடன் சொந்தமாக புதிய கட்டடம் கட்டவேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.