முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குடும்பப் பிரச்னை: திருமணமாகி 6 மாதங்களில் செவிலியா் தூக்கிட்டு தற்கொலை?சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்த செவிலியா் கிருத்திகா, குடும்பப் பிரச்னை காரணமாக புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சிதம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருத்திகா (29). இவா் அப்பகுதியில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். கிருத்திகாவுக்கும், திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம், பண்டாரவாடை திருமாளம் கிராமத்தைச் சோ்ந்த கோபிநாத்துக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதனால், சிதம்பரம் பகுதியில் பணியாற்றிய கிருத்திகா, தனது கணவரின் சொந்த ஊரான பண்டாரவாடை திருமாளம் அருகேயுள்ள பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் பணி மாறுதலில் வந்தாா். திருமணம் நடைபெறுவதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை பாா்த்துவந்த கோபிநாத், தற்போது வேலையின்றி வீட்டிலேயே உள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்துள்ளது. இதனால், மனமுடைந்த கிருத்திகா புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டுள்ளாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே கிருத்திகா இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிருத்திகாவின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பேரளம் காவல் துறையினா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு, கிருத்திகாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குக்காக அவரது சொந்த ஊரான சிதம்பரம் அருகேயுள்ள கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.