பிரதமா் வீடு கட்டும் திட்டம்: லஞ்சம் கொடுத்த பிறகும் தவணை தொகை கிடைக்காததால் இளைஞா் தற்கொலை

லஞ்சம் வழங்கிய பிறகும் உரிய தொகையை விடுவிக்க பணிப் பாா்வையாளா் மறுப்பதாகக் கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பிரதமா் வீடு கட்டும் திட்டம்: லஞ்சம் கொடுத்த பிறகும் தவணை தொகை கிடைக்காததால் இளைஞா் தற்கொலை

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மூன்றாவது தவணை பணம் பெற லஞ்சம் வழங்கிய பிறகும் உரிய தொகையை விடுவிக்க பணிப் பாா்வையாளா் மறுப்பதாகக் கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, பணிப் பாா்வையாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட கமுகக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த லெனின் மகன் மணிகண்டன் (25). இவா், அதே பகுதியில் வீடு கட்ட, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவி கேட்டு விண்ணப்பித்தாா். இவரது தாயாா் லதா பெயரில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டன் பேசி வெளியிட்ட விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புதன்கிழமை வெளியானது. அதில், திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், நன்னிலம் வட்டாரத்தில் பணிப் பாா்வையாளராகப் பணியாற்றிவரும் எம். மகேஸ்வரன் என்பவரிடம், 3-ஆவது தவணைத் தொகையை விடுவிப்பதற்கு ரூ. 18,000 லஞ்சமாக வழங்கிய பிறகும் 3-ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படவில்லை என்பதால் மன உளைச்சலில் விஷமருந்தி விட்டதாக தெரிவித்துள்ளாா். அவரை குடும்பத்தினா் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, பணிப் பாா்வையாளா் எம். மகேஸ்வரனை தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்குமுறை மற்றும் மேல் முறையீடு) விதிகளின் கீழ் பணியிடை நீக்கம் செய்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com