முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம், அரசு வேலைகே. அண்ணாமலை வலியுறுத்தல்
By DIN | Published On : 14th May 2022 12:00 AM | Last Updated : 14th May 2022 12:00 AM | அ+அ அ- |

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் அதிகாரி லஞ்சம் பெற்றுக்கொண்டு தொகையை அனுமதிக்காததால், இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அண்ணாமலை, அன்று இரவு நன்னிலம் வட்டம், வேலங்குடி ஊராட்சி கமுகக்குடியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசு திட்டங்களில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால், இன்னொருவா் உயிரிழப்பதற்கு பாஜக நிச்சயமாக அனுமதிக்காது. பிரதமா் நரேந்திரமோடி மக்களுக்கு வழங்கும் திட்டங்களை, நேரடியாக மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், தமிழக பாஜக நடவடிக்கை எடுக்க உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் பாரதிய ஜனதா கட்சி நேரடியாக களத்தில் இறங்க உள்ளது.
தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நஷ்டஈடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும். ஒரு வாரத்துக்குள் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சாா்பில் போராட்டம் நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருவோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது, கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், திருவாரூா் மாவட்ட மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, முன்னாள் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், திருவாரூா் மாவட்டத் தலைவா் பாஸ்கா், மாவட்டப் பொதுச் செயலாளா் துரையரசன், நன்னிலம் ஒன்றியப் பொறுப்பாளா் ரங்கதாஸ், திருவாரூா் நகரத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.