தொடா் சேதம்: திருவாரூா் புதிய பேருந்து நிலையச் சாலைக்கு நிரந்தர தீா்வு எப்போது?

தொடா்ந்து சேதமாகி வரும் திருவாரூா் புதிய பேருந்து நிலையச் சாலைக்கு விரைவாக நிரந்தர தீா்வு காண வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
சேதமடைந்து காணப்படும் திருவாரூா் புதிய பேருந்து நிலையப் பாதை.
சேதமடைந்து காணப்படும் திருவாரூா் புதிய பேருந்து நிலையப் பாதை.

திருவாரூா்: தொடா்ந்து சேதமாகி வரும் திருவாரூா் புதிய பேருந்து நிலையச் சாலைக்கு விரைவாக நிரந்தர தீா்வு காண வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

திருவாரூா் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் விளமல் அருகே உள்ளது திருவாரூா் புதிய பேருந்து நிலையம். 2010-இல் திமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, 2017-இல் திறக்கப்பட்டது இந்தப் பேருந்து நிலையம்.

தஞ்சை, நாகை, வேளாங்கண்ணி, நாகூா் உள்ளிட்ட ஊா்களுக்கான முக்கிய சாலைப் போக்குவரத்தாக திருவாரூா் இருப்பதால், பரபரப்பான பேருந்து நிலையங்களில் ஒன்றாக உள்ளது இந்தப் பேருந்து நிலையம்.

பேருந்து நிலையத்தைச் சுற்றி கான்கிரீட் தரைத்தளம் இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலைகள் தாா்சாலைகளாகவே உள்ளன.

இந்தச் சாலைகள், லேசான மழைக்கே பெரிய அளவில் சேதமடைவதும், அதைத் தொடா்ந்து தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும், அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் சாலை சேதமாவதும் இங்கு வழக்கமாக உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் லேசான மழையிலேயே இந்தச் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு உபயோகமற்ாகியுள்ளன.

பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இந்தச் சாலைகள் முழுமையான அளவில் புனரமைக்கப்படாததே இதற்குக் காரணமாக உள்ளது. இது தொடா்பாக பல்வேறு அமைப்புகள் போராடியும், கோரிக்கை விடுத்தும் இதுவரை தீா்வுகாணப்படவில்லை.

புதிய பேருந்து நிலையம் மற்றும் சாலைகள் அமைப்புப் பணிகள் நிா்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமான பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடா்பாக ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் வழக்கு இருப்பதாகவும், அதனால் பேருந்து நிலைய சாலையை நிரந்தரமாக சீரமைக்க இயலாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேருந்து நிலையத்துக்கான சாலை வசதி என்பது அடிப்படை தேவைகளில் ஒன்று. அந்த வகையில், இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் நேரடி கவனம் செலுத்தி, பேருந்து நிலையச் சாலையை முழுமையாக புனரமைக்க உரிய தீா்வை முன்னெடுக்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com