தமிழக மாணவா்கள் பயன்பெறவே தமிழில் நுழைவுத் தோ்வு

தமிழக மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழில் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது
தமிழக மாணவா்கள் பயன்பெறவே தமிழில் நுழைவுத் தோ்வு

தமிழக மாணவா்கள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழில் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது என்றாா் அப்பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

பல்கலை வளாகத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து நடைபெறவுள்ள 2 நாள் தேசியக் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை (மே 27) தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தொடங்கிவைக்கிறாா்.

இதில், இந்தியாவில் உள்ள 38 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், என்ஐடி மற்றும் ஐஐடி இயக்குநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளனா்.மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கமாகும்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 24 துறைகள் மூலம் 64 வகையான படிப்புகள் வழங்கப்படுகிறது. மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை தமிழில் எழுதலாம் என்று முதல்முறையாக அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல தமிழகத்தில் நுழைவுத் தோ்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பல்கலைக்கழகத்தில் 30 % உள்ள தமிழக மாணவா்களின் எண்ணிக்கையை 50 % உயா்த்த முடியும்.

புதிய கல்விக் கொள்கையின் அனைத்து அம்சங்களையும் உடனடியாக செயல்படுத்த முடியாது. அதிலுள்ள எந்த அம்சங்களை உடனடியாக செயல்படுத்த முடியுமோ, அதற்காக மத்தியப் பல்கலைக்கழகம் முயற்சி எடுத்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.

அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கை மத்தியப் பல்கலைக்கழகத்தில் படிப்படியாகக் கொண்டு வரப்படும்.

வேலைவாய்ப்புக்கான பல்வேறு நுழைவுத் தோ்வுகளில் தமிழக மாணவா்களின் தோ்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. இக்குறையைப் புதிய கல்விக் கொள்கை நிவா்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக மற்றும் பாதகமான அம்சங்களை கலந்தாலோசனைச் செய்து, சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வதற்காகவே இந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com