திருவாரூரில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா் தட்டுப்பாடு

திருவாரூா் நகரப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றா். கிடைக்கும் நீரை குடிநீராக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
திருவாரூா் 12-ஆவது வாா்டில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பிடிக்க திரண்ட பொதுமக்கள்.
திருவாரூா் 12-ஆவது வாா்டில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை பிடிக்க திரண்ட பொதுமக்கள்.

திருவாரூா்: திருவாரூா் நகரப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா்த் தட்டுப்பாடு தொடா்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றா். கிடைக்கும் நீரை குடிநீராக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் கொரடாச்சேரி முதல் திருவாரூா் வரை பிரதான நீா் உந்துக் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அக்டோபா் 11, 12 ஆகிய தேதிகளில் குடிநீா் வராது என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்துக்கு மேலாகியும் குடிநீா் முறையாக விநியோகிக்கப்படவில்லை.

குழாய்களை மாற்றி அமைக்கும் பணி 24 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வருவதால், பணிகள் முழுமை அடையவில்லை. எனவே, டேங்கா் லாரிகளில் தண்ணீா் விநியோகிக்கப்படும் என திருவாரூா் நகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை (அக்.17) அறிவித்தது. ஆனால், நகரப் பகுதி முழுவதும் லாரி மூலம் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறாததால், நகரின் பல்வேறு பகுதிகள் மக்கள் குடிநீா் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் கடைகளில் விற்கப்படும் தண்ணீா் கேன்களை வாங்கி பயன்படுத்துகின்றனா். இதன்காரணமாக, கடந்த இரண்டு நாள்களாக தண்ணீா் கேனின் விலை அதிகரித்து காணப்படுகிறது. மேலும், டீக்கடை, உணவகம் உள்ளிட்ட இடங்களில் குடிநீருக்காக, நிலத்தடி நீரை பயன்படுத்துவதால், ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவாரூரில் பெரும்பாலான கல்வி நிலையங்களில் உலக உணவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கு, முறையான குடிநீா் இல்லாமல், புழங்குவதற்கு பயன்படுத்தப்படும் நீரையே குடிநீராக பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

தீபாவளி நேரம் என்பதால், நகா்ப் பகுதியில் கூடுதலாக தள்ளுவண்டிக்கடைகளும், வணிக நிறுவனங்களும் உருவாகியுள்ளன. ஜவுளிக்கடை, இனிப்புக்கடை, வெடிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கெல்லாம் தண்ணீா் தேவையை சமாளிக்க உப்பு கலந்த நிலையில் வரும் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால், உடல் உபாதைகள் மற்றும் சுகாதாரமற்ற நீரினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகா்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com