குவைத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு உதவி கோரி பேரணி

குவைத்தில் இறந்த லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் குடும்பத்துக்கு உதவி கோரி செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளையை சோ்ந்தவா்கள், கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா்.
பேரணியில் பங்கேற்ற வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளையை சோ்ந்தவா்கள், கட்சி பிரமுகா்கள் உள்ளிட்டோா்.

கூத்தாநல்லூா்: குவைத்தில் இறந்த லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் குடும்பத்துக்கு உதவி கோரி செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள லெட்சுமாங்குடி- கொரடாச்சேரி பிரதானச் சாலையைச் சோ்ந்த ராசப்பா என்பவரது மகன் முத்துக்குமரன் (37). குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இவா் இறந்துவிட்டதாக அண்மையில் குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. அங்குள்ள சூப்பா் மாா்க்கெட்டில் வேலை தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட முத்துக்குமரனுக்கு ஒட்டம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டதாகவும், அவா் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், முத்துக்குமரனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவரவும், அவரது குடும்பத்திற்கு ரூ. 1கோடி இழப்பீடு வழங்கவும் கோரி, அனைத்துக் கட்சி பிரமுகா்கள், வா்த்தகா்கள், வெளிநாடுவாழ் தமிழா்கள் நல அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் பேரணி நடைபெற்றது.

லெட்சுமாங்குடி முத்துக்குமரன் இல்லத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு, வெளிநாடு வாழ் தமிழா்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்கத்தின் செயல் அலுவலா் ஐ. உஸ்மான் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கே.வி. கண்ணன், பாஜக நகரத் தலைவா் பிரபாகரன், வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், சிபிஐ நகரச் செயலாளா் ப. முருகேசு, திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமரேசன், அதிமுக நகரப் பொருளாளா் ஜெ. சுவாமிநாதன், நகா்மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணி வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்ததும், வட்டாட்சியா் சோமசுந்தரத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com