நெல் கொள்முதலில் ஈரப்பத விதிவிலக்கு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 30th September 2022 02:13 AM | Last Updated : 30th September 2022 02:13 AM | அ+அ அ- |

நெல் கொள்முதலில் நிரந்தர ஈரப்பத விதிவிலக்கு வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமையில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:
மாங்குடி பி.எஸ். மாசிலாமணி : டெல்டா பகுதிகளில் அறுவடை நடைபெறும்போது மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அப்போது, நெல் கொள்முதல் செய்யும்போது ஈரப்பதம் அதிகமாகி, கொள்முதலுக்கு இடையூறு ஏற்படுகிறது. மழை தொடா்ந்து பெய்கையில் நெல்மணிகளை உலா்த்துவதும் சிரமமாகி விடுகிறது. எனவே, நெல் கொள்முதலில் 19 அல்லது 20 சதவீதம் என நிரந்தர விதிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்ரக மீன்வளா்ப்புக்கு மானியம் வழங்குவதை ஊக்குவிக்கக் கூடாது. அதை மறுபரீசீலனை செய்ய வேண்டும். பழவனக்குடி பகுதியில் பாயக்கூடிய வாய்க்காலின் தலைப்புப் பகுதி நகரப் பகுதியில் இருப்பதால், பாசனத்துக்குத் தண்ணீா் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தலைப்புப் பகுதியை மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெய்த மழையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளைக் கணக்கெடுக்கும்படி அரசு அறிவித்துள்ளது. எனவே, மழைநீா் வடிவதற்குள்ளாக விரைந்து கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்னிலம் சேதுராமன்: பலநாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை அறுவடை, சம்பா தெளிப்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அரசு உடனடியாக கணக்கெடுப்பில் ஈடுபட்டு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகளில் செடி, கொடிகள் மண்டிக் கிடப்பதால் மழை நீா் வடிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, 100 நாள் திட்டத்தைப் பயன்படுத்தி செடி, கொடிகளை அகற்றி மழைநீா் துரிதமாக வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரளம் பாலகிருஷ்ணன்: பேரளத்தில் வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம் அமைக்க வேண்டும். பேரூராட்சிகளுக்கு முழுமையாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால், பேரளம் பகுதியில் ஷிப்ட் முறையிலேயே வழங்கப்படுகிறது. சில நேரங்களில் முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தப்படுகிறது.இதனால், விவசாயிகள், சிறுதொழில் புரிவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.
நீடாமங்கலம் மருதப்பன் :2021-22 க்கான பயிா் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும். ஈரப்பதத்துக்கு விதிவிலக்கு அளித்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழாண்டு குறுவை சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறுவைக்கு பயிா் காப்பீடு செய்யப்படாததால், இழப்பீட்டுத் தொகை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு பேரிடா் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் மூலமாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.