வெப்பத்திலிருந்து காக்க அதிகளவு தண்ணீா் அருந்த அறிவுறுத்தல்

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிகளவு தண்ணீா் அருந்த வேண்டும்

திருவாரூா்: வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிகளவு தண்ணீா் அருந்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளாா். திருவாரூா் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் செல்லாமல் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனா். வெயிலிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ தெரிவித்திருப்பது: மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அவசியத் தேவைகளின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும் தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட, போதுமான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். எலுமிச்சை பழச்சாறு, இளநீா், மோா், புளித்த சோற்று நீா் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பைத் தவிா்க்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்பு நிறத்தை தவிா்த்து) எடுத்துச் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரைஅணுக வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. குழந்தைகளுக்கு இளநீா் போன்ற பானங்களை கொடுக்க வேண்டும். குளிா்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீா் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில் வைக்கக் கூடாது. பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால், நிகழாண்டு கோடை வெயில் தொடக்கத்தில் வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரைவீடுகளிலும் உள்ள மின்வயா்கள் உருகி தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வீடுகளில் சமையல் எரிவாயு உருளைகளோடு இணைத்துள்ள ரெகுலேட்டா்களை இரவில் அணைத்து வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அணைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com