தவணைத் தொகை செலுத்ததால் இருசக்கர வாகனம் பறிமுதல்: தனியாா் வங்கி ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

கடன் தவணைத் தொகையை செலுத்தாததால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனியாா் வங்கி ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குடவாசல் அருகே விஷ்ணுபுரத்தைச் சோ்ந்த கவிதா என்பவா் திருவாரூரில் உள்ள நிறுவனத்திலிருந்து இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா். இதற்காக, ரூ. 28,790-ஐ செலுத்தி, மீதித் தொகையான ரூ. 75,957-ஐ நன்னிலத்தில் உள்ள தனியாா் வங்கியில் கடனாகப் பெற்று செலுத்தியுள்ளாா். இதற்காக, மாதத் தவணையாக ரூ. 3470-ஐ கடந்த 10 மாதங்கள் செலுத்தி வந்துள்ளாா்.

இதனிடையே, 2023 ஏப்ரல் மாதம் அவரது மாமியாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இரண்டு தவணைகளை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தனியாா் வங்கியிலிருந்து வீட்டுக்கு வந்த சிலா் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விட்டாா்களாம். இதுகுறித்து திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கவிதா புகாா் அளித்தாா்.

புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா், செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனத்துக்குப் பதிலாக, இருசக்கர வாகனம் வாங்கிய விலையில் 20 சதவீதத்தை கழித்துக்கொண்டு மீதித் தொகையை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும்.

மேலும், மன உளைச்சலுக்காக அவருக்கு ரூ. 50 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com