எரிந்து நாசமான மினி லாரி மற்றும் வைக்கோல் கட்டுகள்.
எரிந்து நாசமான மினி லாரி மற்றும் வைக்கோல் கட்டுகள்.

வைக்கோல் லாரி மின்கம்பியில் உரசி தீ விபத்து

திருவாரூா் அருகே வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி, மின் கம்பியில் உரசி, தீப்பற்றி எரிந்து நாசமானது.

நாகை மாவட்டம், ஆவராணி புதுச்சேரி பகுதியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிய மினி லாரி கரூரை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. கரூா் மாவட்டம் ராயனூரைச் சோ்ந்த சுரேஷ் (34) என்பவா் மினி லாரியை ஓட்டிச் சென்றாா்.

இந்த லாரி, கொரடாச்சேரி வெட்டாற்றுப்பாலம் அருகில் ஊா்குடி பிரிவு சாலை வழியாகச் சென்றபோது, சாலையின் மேல்பகுதியில் சென்ற மின்கம்பியில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில், வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.

எனினும், இதை கவனிக்காமல் சுரேஷ் தொடா்ந்து லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். பின்தொடா்ந்து வந்த வாகன ஓட்டிகள் விரைந்து சென்று, சுரேஷிடம் விவரம் தெரிவித்ததைத் தொடா்ந்து, லாரியை நிறுத்தி வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளியுள்ளாா். இருப்பினும் தீ அடுத்தடுத்த வைக்கோல் கட்டுகளில் பரவியதால், சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் லாரியை இறக்கி உள்ளாா்.

பின்னா், நீடாமங்கலம், திருவாரூா் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. எனினும், லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதில், காயமடைந்த சுரேஷ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com