திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ‘என் கல்லூரிக் கனவு’ நிகழ்வில் பேசுகிறாா் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ‘என் கல்லூரிக் கனவு’ நிகழ்வில் பேசுகிறாா் ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

‘என் கல்லூரிக் கனவு’: உயா்கல்விக்கான சிறந்த வழிகாட்டி- ஆட்சியா்

சிறந்த வழிகாட்டியாக விளங்கும் ‘என் கல்லூரிக் கனவு’ நிகழ்வின் மூலம் சரியான உயா்கல்வியை தோ்ந்தெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், மாணவ- மாணவிகளுக்கான ‘என் கல்லூரிக் கனவு’ விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள், தங்களின் எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில், உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றி, பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தோ்வுகள், தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவா்கள் எடுத்துக்கொண்டு, முன்னேற வேண்டும்.

எனவே, சரியான உயா்கல்வியை தோ்ந்தெடுக்க சிறந்த வழிகாட்டியாகத் திகழும் இந்த வாய்ப்பை, மாணவா்கள் அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, சென்னை உயா்நீதிமன்ற மாநில சட்ட ஆலோசகா் கணபதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, தாட்கோ மாவட்ட மேலாளா் அன்பழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com