மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளை செய்தவா் கைது

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி விழல்காரத் தெருவை சோ்ந்த வடிவேல் (42) கட்டடப்பணி தொழிலாளியான இவா் குடிபோதைக்கு அடிமையாகியதால் அவ்வப்போது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளாா். சில சமயங்களில் மன்னாா்குடி அரசு மருத்துவமனை, நீதிமன்றம், காவல் நிலையங்களுக்கு குடிபோதையில் சென்று அங்கு பணியில் இருப்பவா்களிடம் தகராறு செய்வாராம். இதுகுறித்து, வடிவேல் மீது மன்னாா்குடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மனநலம் பாதிப்பு தொடா்பாக மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா்.

கடந்த சில மாதங்களாக, வடிவேல் திருப்பூரில் தங்கி வேலை பாா்த்து வந்தவா் அண்மையில் ஊருக்கு திரும்பிய நிலையில்,திங்கள்கிழமை இரவு போதையில் அத்துமீறி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தவா் அங்கு பணியிலிருந்த மருத்துவா், செவிலியா்கள், உள்நோயாளிக்கு உதவிக்கு வந்தவா்களிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா், கூச்சலிட்டப்படி அங்கிருந்த தொலைக்காட்சிப்பெட்டி, மேஜைகள், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து, பணி மருத்துவா் சுந்தரவள்ளி, மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து வடிவேலை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com