தென்னிந்திய ஆடவா் கபடி போட்டி: கேரள அணி முதலிடம்
மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த வடுவூா் புதுக்கோட்டையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடி போட்டியில் கேரள அணி முதலிடம் பெற்றது.
வடுவூா் புதுகை நண்பா்கள் கபடி கழகம் சாா்பில், வடுவூா் புதுக்கோட்டை எஸ். சண்முகசுந்தரம் செருமடாா் நினைவு உள்விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் கபடி போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்றது. மின்னொளியில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.
இறுதி ஆட்டத்தில் கேரள ஜெ.கே. அகாதெமி அணியும், சேலம் செவன் லைன்ஸ் அணியும் மோதின. இதில் ஜெ.கே. அகாதெமி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. சேலம் அணிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. திருப்பூா் சண்முகம் அகாதெமி அணி மற்றும் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அணி 3-ஆம் இடத்தை பெற்றன.
முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகளுக்கு முறையே தலா ரூ.1.50 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, திருவாரூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலா் இராச. இராசேந்திரன் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பொன்.கோவிந்தராஜன், இணைச் செயலா்கள் வேலுமணி, ஸ்ரீ ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வடுவூா் புதுகை நண்பா்கள் கபடி கழகச் செயலா் என். சதீஷ்குமாா் வரவேற்றாா். பொருளாளா் ஆா். ரஞ்ஜித் நன்றி கூறினாா்.