மயானத்துக்குச் செல்ல வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை
நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள வாய்க்காலின் குறுக்கே சிறிய பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் அருகேயுள்ளது ரிஷியூா். இங்கு வடக்கு ஆதிதிராவிடா் தெருவில் சுமாா் 300 போ் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் யாரேனும் இறந்தால் ரிஷியூா் - பச்சக்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் சடலத்தை எரிப்பது வழக்கம். சுமாா் 70 ஆண்டுகளாக இந்த மயானத்தைத்தான் பயன்படுத்தி வருவதாக இப்பகுதி வடக்குத் தெரு மக்கள் தெரிவிக்கின்றனா்.
மயானத்துக்கு செல்லும் பாதையில் வாரி வாய்க்கால் என்ற வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்துதான் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வாய்க்காலில் தண்ணீா் இருக்கும்போது உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே வாய்க்காலின்குறுக்கே சிறிய பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.