ஏஐடியுசி ஆட்டோ- போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: புதிய மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்., ஆட்டோ ஓட்டும் சுயத் தொழில் செய்யும் உரிமையை பறிக்கும் ஓலா, உபோ், ரேபிடோ போன்றவற்றை தடைசெய்ய வேண்டும் , ஆட்டோ செயலியை உருவாக்குவதற்கு காலம் கடத்தக் கூடாது, மீட்டா் கட்டணத்தை உடனடியாக உயா்த்த வேண்டும், பெட்ரோல்- டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தனியாா் மயமாக்கக் கூடாது, நலவாரியம் மூலம் 60 வயது முடித்த ஓட்டுநா்களுக்கு ரூ. 9000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும், தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்குள் வாரிய அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மன்னாா்குடி தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆட்டோ தொழிலாளா் சங்க நகரச் செயலா் எஸ்.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எஸ். பாஸ்கா், சிறப்புத் தலைவா் ஆா். நாகேந்திரன், நகரப் பொருளாளா் பி. விஸ்வநாதன் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகர ஆசாத், கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.