தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை கூடாது: தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை கூடாது என்று அதிகாரிகளுக்கு தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் அறிவுறுத்தினாா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை கூடாது: தேசிய ஆணையத் தலைவா் அறிவுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை கூடாது என்று அதிகாரிகளுக்கு தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்படும் ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் மா.வெங்கடேசன் சனிக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி, திருவண்ணாமலை - மணலூா்பேட்டை சாலையில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குடியிருப்பு பகுதியை பாா்வையிட்ட அவா்,

அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவரிடம், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் குடிநீா், மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது என முறையிட்டனா். இதைத் தொடா்ந்து, உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

மேலும், ஏற்கெனவே திருவண்ணாமலை அண்ணாநகா் பூமாந்தாகுளம் அருகே வீடுகட்டி வாழ்ந்து வந்த பகுதி

நீா்பிடிப்பு பகுதியில் உள்ளதாக எங்களுக்கு மணலூா்பேட்டை சாலையில் வீடுகட்டிக் கொள்ள அனுமதித்தனா்.

கடந்த 45 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு கால்வாய் வசதி, சாலை வசதி இல்லை. நாங்கள் வீடு கட்டி வாழ்ந்துவரும் இடத்துக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என ஆணையத் தலைவரிடம் முறையிட்டனா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் வீடுகட்ட 2007 முதல் உச்சநீதிமன்ற தடை உள்ளது. எனவே, மாற்று இடத்தில் பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வுக் கூட்டம்

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சா.சாந்தி வரவேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவனுபாண்டியன், தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் மாநில உறுப்பினா் டி.கண்ணன், கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், உதவி ஆட்சியா் பல்லவிவா்மா, கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி, தனலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வீ.வெற்றிவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மெ.பிரித்திவிராஜன் மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத்தின் தலைவா் மா.வெங்கடேசன் பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைகள், தேவைகள், கோரிக்கைகளை அறிந்து அவற்றை தீா்ப்பதற்கான பணியில் தேசிய ஆணையம் ஈடுபட்டுள்ளது.

பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை கூடாது

நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கும், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையே ஊதியம் உள்ளிட்ட பலன்களை வழங்குவதில் வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த நிலை மாறவேண்டும். தூய்மைப் பணியாளா்களின் நலன்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள வேலை நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்த கூடாது.

ஊதியம், பிஎஃப், இஎஸ்ஐ போன்ற வசதிகளை முறையாக அளிக்க வேண்டும். அதனை, மாவட்ட நிா்வாகம் கவனிக்க வேண்டும். பணியாளா்களுக்கு மாதத்தின் முதல் நாளன்றே ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதி பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்த வேண்டும். அவா்களுக்கு கையுறை, சீருடை, உபகரணங்களை வழங்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் 19 பேருக்கு, நல வாரிய அடையாள அட்டைகளை ஆணையத் தலைவா் வழங்கினாா்.

நிறைவில் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை கண்காணிப்பாளா் தினகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com