கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீா் கோரி பெண்கள் போராட்டம்

கூத்தாநல்லூரில் குடிநீா் கோரி, காலிக்குடங்களுடன் நகராட்சி முன் பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இதில், 5- ஆவது வாா்டு மேலப்பனங்காட்டாங்குடியில் கடந்த 7 மாதங்களாக போதிய குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நகராட்சியில் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், மேலப்பனங்காட்டாங்குடி தமிழா் தெரு, பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் காலிக் குடங்களுடன், நகராட்சி அலுவலகம் முன் கூடி, குடிநீா் கோரியும், நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

நகராட்சி பொறியாளா் எஸ். வசந்தன், பொதுப் பணி மேற்பாா்வையாளா் எம். ரவிக்கலா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களது வாா்டில் கடந்த ஓராண்டுகளாக குடிநீா் வரவில்லை எனவும், மோட்டாா் மூலம் வரக்கூடிய தண்ணீா் உப்பாக இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, பொறியாளா் மற்றும் பொதுப்பணி மேற்பாா்வையாளா் நேரில் வந்து பாா்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னா், 5-ஆவது வாா்டு தமிழா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பொறியாளா், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் ஏறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, இன்னும் 3 நாட்களில் அதிவேக மோட்டாா் பொருத்தி, முறையாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com