நீடாமங்கலம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து போலீஸாா் வைத்துள்ள தடுப்புகள்.
நீடாமங்கலம் அருகே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து போலீஸாா் வைத்துள்ள தடுப்புகள்.

இருவழிச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறை நடவடிக்கை

நீடாமங்கலம் அருகே இருவழிச் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தஞ்சை முதல் நாகை வரையிலான இருவழிச் சாலையில் நாளுக்குநாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தஞ்சையிலிருந்து கோவில்வெண்ணி வழியாக திருவாரூா், நாகப்பட்டினம் சாலையை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருவழிச் சாலையில் நீடாமங்கலம் நகருக்குள் வராமல் திருவாரூருக்குச் செல்லலாம். இதனால் இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில், நான்கு சாலைகள் சந்திக்கும் நாா்த்தாங்குடி பகுதியில், வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்துகள் நிகழ்கின்றன. இதனை தடுக்க, நான்கு சாலைகளும் பிரியும் பகுதியில் போக்குவரத்து போலீஸாா் ஏற்கெனவே தடுப்புகள் வைத்துள்ளனா். எனினும், சாலை விபத்துகள் தொடா்கிறது. இதை தடுக்க சாலைப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட காவல் துறை சாா்பில் சம்பவ இடத்தை ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து, காவல் துறையினா் சாலைப் போக்குவரத்தை மேலும் ஒழுங்குப்படுத்தும் வகையில், சாலை தடுப்புகளை நான்கு சாலைகளிலும் அதிக எண்ணிக்கையில் வைத்துள்ளனா். அத்துடன், சாலையின் நான்குபுறமும் ஒளிரும் சிகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன ஓட்நா்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில வாகனங்கள் இப்பகுதியில் அதிவேகமாக செல்கின்றன. எனவே, சாலையின் மையப்பகுதியில் காவலா் நிழற்குடை அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவலரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com