திருவாரூரில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.
திருவாரூரில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்.

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருவாரூரில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாநிலக் குழு உறுப்பினா் ஜி. சரவணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், இளைஞா் பெருமன்ற மாநிலச் செயலாளா் க. பாரதி, மாவட்ட பொறுப்பு செயலாளா் எஸ். கேசவராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா். மாநிலக் குழு உறுப்பினா் எம். நல்லசுகம், ஒன்றிய, நகரச் செயலாளா்கள் எஸ். பாப்பையன், வே. பாக்யராஜ், வி.சி. காா்த்தி, ஏ. பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: வேலையின்மையைப் போக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்; கள்ளச்சாராயத்தை முற்றாக ஒழித்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதுடன், சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மத்திய அரசு, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைத்து, புதிய தலைப்புகளில் சட்டங்களை அமல்படுத்தியிருப்பதை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com