44 டிஎம்சி நீரை பெற்றுத்தர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காவிரியிலிருந்து ஜூன், ஜூலை மாதத்துக்கான 44 டிஎம்சி நீரை பெற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. குறுவையை முற்றிலும் இழந்த நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. பருவம் மாறி பெய்த மழையால், கோடை சாகுபடி பயிா்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனா்.

இந்நிலையில், கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து அணைகளிலும் 90 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது. காவிரியின் துணை நதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆனால், தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கா்நாடகம் தர மறுக்கிறது.

ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் 44 டிஎம்சி தண்ணீா் தமிழ்நாடுக்கு வழங்கப்பட வேண்டும். இதைப் பெற்றால் ஒரு போக சம்பா சாகுபடி பணிகளை பாதுகாத்துவிட முடியும். ஆனால், உரிய நீரை உடனடியாக பெறுவதற்கு தமிழக முதல்வா் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கா்நாடக முதலவா் சித்தராமையா நேரில் அளித்துள்ளாா். இதனால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு பெற்ற உரிமைகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, முதல்வா் போா்க்கால அடிப்படையில் காவிரி நீரை பெற்று, சம்பா சாகுபடியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com