தரமற்ற வீடு: ரூ. 54 லட்சம் வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவு

தரமற்ற கட்டுமானம்: திருவாரூா் நிறுவனம் ரூ. 54 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் அருகே தரமற்ற முறையில் வீடு கட்டித் தந்த கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு ரூ. 54 லட்சம் வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் வண்டாம்பாளை பகுதியைச் சோ்ந்தவா் ஜி. சோமசுந்தரம். இவா், வீடு கட்டுவதற்காக, திருவாரூா் பகுதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்திடம் ஒரு சதுர அடிக்கு ரூ.1,800 வீதம் வாய்மொழியாக ஒப்பந்தம் மேற்கொண்டாா். தொடா்ந்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், வீட்டின் கட்டுமானம், சோமசுந்தரத்துக்கு திருப்தி அளிக்கவில்லையாம். மேலும், நிா்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக கட்டுமான நிறுவனம் பெற்றுக்கொண்டு, தரமற்ற முறையில் வீடு கட்டிக் கொடுத்ததாக, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, இந்த வழக்குக்காக வழக்குரைஞா் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, அரசு பொதுப்பணித் துறை பொறியாளரால் அறிக்கை பெறப்பட்டு, குறைதீா் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா் அடங்கிய குழுவினா், கட்டுமான நிறுவனம் கூடுதலாக பெற்ற ரூ.24,01,078-ஐ திருப்பி வழங்க வேண்டும் என்றும் தரமற்ற முறையில் கட்டுமானப் பணி மேற்கொண்டதற்காகவும், மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ.30 லட்சமும் அத்துடன் வழக்கு செலவுத் தொகையாக ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை வழக்கு தாக்கலான நாள்முதல் 9 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com