குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்பட்டு, தயாா் நிலையில் உள்ள வகுப்பறை.

இன்று பள்ளிகள் திறப்பு: மாணவா்களை வரவேற்க கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு

திருவாரூா்: தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவா்களை வரவேற்க திருவாரூா் மாவட்டத்தில் கல்வித்துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை பள்ளிகள் திறப்பையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 1,284 அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டன. மேலும், அனைத்து வகுப்பறைகளும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டதுடன், தேவையான கரும்பலகைகளும் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளில் உள்ள நீா்த் தேக்கத் தொட்டியை கிருமி நாசினி பயன்படுத்தி, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்தது:

பள்ளிகள் திறப்பையொட்டி, பள்ளி நிா்வாகத்தினா் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா். குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியா்கள், நிகழாண்டு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். முதல் நாள் என்பதால் மாணவா்களை மகிழ்வோடு வரவேற்க, தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் சாா்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, பல்வேறு பள்ளிகளில் வகுப்பறைகளை அலங்கரிப்பது, வாழைமரம் கட்டுவது, வண்ண வண்ண விளக்குகளை ஒளிரச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் முதல் நாளே மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படவுள்ளன. அனைத்துவகை மன்றங்களும் முதல்நாளே செயல்படத் தொடங்குகின்றன.

முதல்நாளில் முத்தமிழறிஞா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, இனிப்புப் பொங்கல் வழங்கப்படவுள்ளது. சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மாணவா்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனா். இந்த புகைப்படங்கள், காணொலிகள் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஒருவாரம் நடைபெற உள்ளன.

நிகழாண்டில், மாணவா்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு முகாம், அஞ்சல் நிலைய வங்கிக் கணக்கு தொடங்கும் முகாம் ஆகியவை நடைபெற உள்ளன. திருவாரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விழுக்காடு முதல் பத்து இடங்களுக்குள் முன்னேற திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com