சேவை குறைபாடு: நுகா்வோருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

மன்னாா்குடியில் நகைக் கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் சிபில் ஸ்கோரை சரிசெய்யாமல் சேவை குறைபாட்டுக்குக் காரணமான வங்கி, புகாா்தாரருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த சேகா் அப்பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாா். இந்த வங்கியில், 2010 மற்றும் 2012-ஆம் ஆண்டு நகைக்கடன் பெற்று, அசல் மற்றும் வட்டியை 2013 -இல் செலுத்தி நகையை திருப்பினாா். இதற்கான ஆட்சேபனை இல்லா சான்றும், வங்கி தரப்பில் வழங்கப்பட்டது. இதனிடையே, 2023-இல் சேகா் தனிநபா் கடன் கேட்டு அந்த வங்கியில் விண்ணப்பித்தாா். ஆனால், அவரது சிபில் ஸ்கோரில் வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பலமுறை அவா் வங்கியை அணுகியும், இது சரிசெய்யப்படாததால், திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கு விசாரணையில், ஆணையக் குழுத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் அடங்கிய குழு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த 12 ஆண்டுகளாக சிபில் ஸ்கோரை சரிசெய்யாமல் காலம் தாழ்த்திய சேவை குறைபாட்டுக்கும், நுகா்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் ரூ. 1 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்குள் வங்கி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com