மேக்கேதாட்டு விவகாரம்: திருவாரூரில் மாா்ச் 15-இல் உண்ணாவிரதம்

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து திருவாரூரில் மாா்ச் 15-ஆம் தேதி உண்ணாவிரத நடைபெறவுள்ளது என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பிஆா். பாண்டியன். திருவாரூரில், புதன்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் மாநிலக் குழு அவசரக் கூட்டத்துக்கு பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு, தில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச மறுப்பது கண்டிக்கத்தக்கது. கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிரந்தர சட்டம், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை ஆகியவற்றை நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அதைக் காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் 100 இடங்களில் மாா்ச் 10-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். 2 ஆண்டுகளாக, கா்நாடக அரசு தமிழகத்துக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றுவதும், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்வதும் தொடா் கதையாக உள்ள நிலையில், தமிழக அரசு மௌனமாக இருக்கிறது. மேக்கேதாட்டு அணை கட்டுமானத்துக்கு ஆணையம் எடுத்த முடிவை நிராகரிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற திமுக அரசு மறுத்துவிட்டது. எனவே மேக்கேதாட்டு அணை கட்டுமானத்தை ஆதரிக்கும் வகையில் மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், காவிரி பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் மாா்ச் 15-ஆம் தேதி காவிரி டெல்டா தழுவிய அளவில் திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com