ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாற்று இடம் வழங்க மக்கள் கோரிக்கை

நன்னிலம் நல்லமாங்குடிப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. இதையடுத்து மாற்று இடம் வழங்க பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாகை - கும்பகோணம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வழியில் உள்ள நன்னிலம் நல்லமாங்குடிப் பகுதியில் நெடுஞ்சாலைதுறைக்குச் சொந்தமான இடத்தில் வணிக வளாகங்கள், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஆக்கிரமிப்பாளா்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து நன்னிலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் சிவகுமாா் தலைமையில், நெடுஞ்சாலைத் துறையினா், காவல்துறையினா் உதவியுடன் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினாா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: 25 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம், மாற்று இடம் வழங்காமல், எங்கள் வீடுகளை இடித்தால் குழந்தைகளுடன் எங்கே வசிப்பது என கேள்வி எழுப்பி வீட்டின் உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். விரைவில் அரசு சாா்பில் மாற்று இடம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com