வீட்டுப்பத்திரம் வழங்க இழுத்தடிப்பு: நுண்கடன் வழங்கும் நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கடனை அடைத்தபிறகும், வீட்டுப்பத்திரம் வழங்க இழுத்தடிப்பு செய்த நுண்கடன் வழங்கும் நிறுவனம், புகாா்தாரருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூா் மாவட்ட குறைதீா் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. மன்னாா்குடி காரக்கோட்டையைச் சோ்ந்தவா் நல்லதம்பி. இவா், 2019-இல் மன்னாா்குடி பெரிய கம்மாளத்தெருவில் உள்ள சிறு கடன் வழங்கும் நிறுவனத்தில், தனது வீட்டை அடமானமாக வைத்து ரூ. 2.50 லட்சம் கடன் பெற்றாா். மாதாந்திரத் தவணை செலுத்தி வந்த நிலையில், 2023 ஜூன் 11-ஆம் தேதி நல்லதம்பி இறந்து விட்டாா். இதன் பிறகும் 3 மாத மாதாந்திரத் தவணையாக ரூ. 21,150 வசூலிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத்தொகை கிடைத்த பின், இனிமேல் கடன் செலுத்தத் தேவையில்லை என்று நிறுவனம் தரப்பில் கூறிய நிலையில், அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் பத்திரம், தடையில்லா சான்றிதழை நல்லதம்பியின் மனைவி ஜோதியிடம் வழங்க ரூ. 1,05,162 கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ஜோதி தொடா்ந்த வழக்கில் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் ஆகியோா் அடங்கிய குழுவால் வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: வீட்டுப்பத்திரம், தடையில்லா சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும், சட்டவிரோதமாக வசூல் செய்த ரூ. 21,150 ஐ திரும்ப வழங்க வேண்டும், மன உளைச்சலுக்காக ரூ. 5 லட்சம், செலவுத்தொகை ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றையம் 9 சதவீத வட்டியுடன் நுண்கடன் வழங்கும் நிறுவனம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com